Sunday 16 December 2012

அழகிய கடன் உதவி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி!

அழகிய கடன் உதவி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி!


சென்னை வாழ் இளையான்குடி புதூர் மக்களால் நடத்தப்படும்  அழகிய கடன் அறக்கட்டளை   ஜகாத், பித்ரா குர்பானி, மருத்துவ உதவி, கல்வி உதவி வாழ்வாதார உதவி வட்டியில்லாக் கடன் போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில்  மணப்பாறையை சேர்ந்த குழந்தை ஒன்றின் சிகிச்சைக்காக  10000 ரூபாய்க்கான   வழங்கியது.அல்ஹம்து லில்லாஹ்.

சஃபர் மாதம் பீடை மாதமா?


சஃபர் மாதம் பீடை மாதமா?

அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும்.அல்லது ஒருவருக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கவும் செய்யும். இதை வைத்து அந்த நாளை நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ கூறிவிட முடியாது. இவ்வுலகம் சோதனைக் கூடமாகும். மரணிக்கும் வரை ஒவ்வொரு மனிதனும் பல விதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பான். சோதனைகள் வரும்போது அதை ஒரு முஸ்லிம் பொறுத்துக் கொள்ளவும் பொருந்திக் கொள்ளவும் வேண்டும். அது அவனுடைய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது.
இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இப்படி ஈமான் கொள்வது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
அல்லாஹ்வையும் வானவர்களையும் நபிமார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
ஆகவே நமக்கு நடக்கக்கூடிய நல்ல கெட்ட காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் நம்மீது விதித்த விதியின்படியே நடக்கின்றதென்று நம்ப வேண்டுமே தவிர, இன்று கெட்ட நாள், இதனால்தான் எனக்கு இந்த ஆபத்து நடந்ததென்று கூறுவது மூட நம்பிக்கையும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய ஒன்றாகும்.
சோதனையின்றி வாழ்வில்லை
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்) அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின் பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்: திர்மிதி
ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது
ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இது அல்லாஹ்வின் ஏற்பாட்டினால் தான் (களா கத்ரினால்தான்) ஏற்பட்டதென்றும், நான் பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டு முடிந்து விட்டதென்றும் இது நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றும் நம்பாத வரை அவர்கள் உண்மையான முஃமினாக முடியாது.
இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இப்னு உமரின் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! களாகத்ரை (விதியை) ஈமான் கொள்ளாதவர், உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி, இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
உபாதா பின் சாமித்(ரலி) அவர்கள் தன் மகனைப்பார்த்து, மகனே! உனக்கு ஏற்படுகிற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல் போய்விடாது என்ற உண்மையையும், உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்ளமாட்டாய் எனக்கூறி, பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள்.
அல்லாஹ் எழுது கோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட, எதை எழுத வேண்டும் என அது கேட்க, இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றிற்கும் உண்டான விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான், என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் எனக் கூறி, மகனே! இவ்வாறு விதியை நம்பாது ஒருவர் மரணித்து விடுவாராயின் அவர் என்னை சார்ந்தவரல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தார்கள். ஆதாரம்: அஹ்மத்
இப்னு அபூதைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் உபை பின் கஃபை அணுகி, என் உள்ளத்தில் விதியைப்பற்றி சிறிது சந்தேகம் உள்ளது. அதை நீக்குவதற்கு ஏதாவது சொல்லித்தாருங்கள். அல்லாஹ் அந்த சந்தேகத்தை போக்கிவிடுவான் என்று கூறினேன். அதற்கு உபை பின் கஃபு(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். (இப்னு அபூ தைலமியே!) நிச்சயமாக உமக்கு ஏற்படும் துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உமக்கு வராமல் போகாது எண்ற உண்மையையும், உமக்கு எற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உமக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையம் அறிந்து, களா கத்ரைக் கொண்டு நீர் ஈமான் கொள்ளாதவரை உஹது மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். இவ்வாறு நீர் களாகத்ரைக் கொண்டு ஈமான் கொள்ளாது மரணித்துவிட்டால் நீர் நரகவாசிகளில் ஒருவரே என்றார்கள். பின்பு நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களிடமும் ஹுஸைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடமும் வந்தேன். இவர்கள் எல்லோரும் இது போலவே நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்.
ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்
சோதனை வருவது அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் நேசத்தையே வெளிக்காட்டுகின்றது.
அல்லாஹ் தன் அடியாருக்கு நலவை நாடினால் இவ்வுலகிலேயே தண்டனை (சோதனை)யை வழங்குகின்றான். அல்லாஹ் தன் அடியாருக்கு கெடுதியை நாடினால் மறுமையில் தண்டனையை முழுமையாக வழங்குவதற்காக இவ்வுலகில் எவ்வித தண்டனையும் (சோதனையும்) வழங்குவதில்லை, அதிக சோதனையுடன்தான் அதிக கூலியும் கிடைக்கும், அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். அதை யார் பொருந்திக் கொள்கின்றார்களோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கின்றது, யார் அதை கோபிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம் கிடைக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்: திர்மிதி
ஸஃபர் மாதமும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதம்தான்
சோதனைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது என நம்ப வேண்டிய ஒரு முஸ்லிம், ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையயை களிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன் கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து இன்னும் இது போன்ற பல சடங்குகளையும் செய்து அந்தப்பீடையை போக்கவேண்டும் என்று எண்ணி பல சடங்கு சம்ரிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் நமது இஸ்லாமிய பல சகோதர சகோதரிகள் செய்கின்றார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூட நம்பிக்கையுமாகும். இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கைகளை விட்டுவிட்டு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்ப வேண்டும். ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறை வசனமோ நபி மொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதை தடுக்கும் நபிமொழியைத்தான் பார்க்க முடியும்.
இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது, ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
ஸஃபர் மாதத்தை பீடையுள்ள மாதம் என்பதற்கு, இந்த மூட நம்பிக்கையுள்ளவர்கள் கூறும் காரணம், நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தது போல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையா? முன்பு கூறியது போன்று இது அல்லாஹ்வின் விதிப்படி நடந்ததென்று ஒரு முஸ்லிம் நம்ம வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள், ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள், இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள், அந்த நாளை யாராவது பீடையுள்ள மாதம் என்று கூறுகின்றார்களா? அதை கொண்டாடும் நாளாக அல்லவா? எடுக்கின்றார்கள். நமக்குள் நாமே முரண்படுகின்றோம்.
ஆகவே ஸஃபர் மாதத்தையும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதமாக நினைத்து நமது அன்றாட காரியங்களை செய்ய வேண்டும். ஸஃபர் மாதத்தில் ஏதும் சோதனைகள் வந்தால்கூட அது ஸஃபர் மாத்தினால் ஏற்படவில்லை, அல்லாஹ்வின் ஏற்பாட்டினால்தான் வந்தது என்று நம்ப வேண்டும். இப்படிபட்ட உறுதியான ஈமானை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

இளையான்குடி புதூர் வபாத் செய்தி !

 இளையான்குடி புதூர் வபாத் செய்தி !


கூநைனா அபுதாலிப் மனைவி சைனம் பிள்ளை [ பேட்டை அம்மா] 13.12.12.அன்று புதூரில் வபாத் ஆனார்.அன்னாரின் ஜனாஸா புதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கள்ளம்பேரன் ஹுசைன் மனைவியும் சுல்த்தார்  அவர்களின் தாயாருமான [மொட்டு விரலி மகள்] மேஹர் பீவி   16.12.12 அன்று பரமக்குடியில் வபாத் ஆனார்.  அன்னாரின் ஜனாஸா புதூரில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

Sunday 9 December 2012

இளையான்குடி புதூர் ஜமாஅத் வபாத் செய்தி!

                                        இளையான்குடி புதூர் ஜமாஅத் வபாத் செய்தி!


தாடி வாலா பேரனும் பூனையன் காசிம் மருமகனுமான ரம்ஜான் அலி 7.12.12 அன்று  சென்னையில் வபாத் ஆனார்.அன்னாரின் ஜனாஸா அன்று மாலை ராயப்பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

S.A.N.K சுல்த்தான் [சண்டி தம்பி]    அவர்கள் இன்று சென்னையில் வபாத் ஆனார்.  அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ  இன்று  மதியம் 1 மணியளவில் ராயப்பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.

Thursday 29 November 2012

வபாத் செய்திகள்!

வபாத் செய்திகள்!


கரடன் லியாகத் அலி தாயாரும் கச்சிமீரா மனைவியுமான  சவுதால்   25.11.12 அன்று சென்னையில் வபாத் ஆனார். அன்னாரின்   ஜனாஸா மறுநாள் காலை ராயப் பேட்டை கப்ருஸ்தானில் நல்லடக்கம்   செய்யப்பட்டது

மண்டையன் குலாம் அண்ணன்  சிக்கந்தர் 27.11.12 அன்று புதூரில் வபாத் ஆனார்.   அன்னாரின்   ஜனாஸா புதூரில்    நல்லடக்கம்   செய்யப்பட்டது  

Thursday 22 November 2012

முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்


முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
Articleமுஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை “பஞ்சா” என்ற பெயரில் பலர் இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர்.மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும்ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது இஸ்லாத்தில் உள்ள பண்டிகை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல் மேலும் மாற்று மதத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று நம் சகோதரர்களும் இதுபோன்று ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.
முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமில்லை. மாற்று மதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி ஷியாக்களால் உருவாக்கப்பட்டவைதான் இவையனைத்தும்.
குறிப்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதன் தாத்பரியம் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகும். அதாவது ஷியாக்களின் கொள்கையான ஐந்து புனிதர்களை வணங்கும் கொள்கைதான் இந்த பஞ்சாவின் அடிப்படையாகும்.
அதாவது
1) முஹம்மது (ஸல்) அவர்கள்,
2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),
3) அலி (ரலி),
4) ஹஸன் (ரலி),
5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.
இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும். அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து பெரும்பாலும் இந்த பண்டிகைகள் உயிரோட்டமற்று ஏதோ கடனுக்காக நடத்தப்படுகின்றன. ஷியாக்களால் உருவாக்கப்பட்டு அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய அரசாங்கமும் இதை முஸ்லிம்களின் பண்டிகையாகவே கருதுகிறது. இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்தமுஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுவதுதான் கொடுமையிலும் கொடுமை.
இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்கதினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸைன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி) இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக இப் பஞ்சாஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.
(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன்(ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு மற்ற அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும்.
ஊர்வலம் என்ற பெயரில் கொட்டு மேளதாளங்களுடன் செல்வதால் பல சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற அறியாமையினால் செய்யும் செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன. அன்பிற்குறிய முஸ்லிம்களே! நமது இறைவன் ஒருவன்தான். அவனுக்கு எந்தவகையிலும் நாம் இணைவைக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு தூதுத்துவம் நிறைவுற்றுவிட்டது. அதற்குப்பின்னால் ஏற்படடுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். நபி (ஸல்) அவர்கள் எந்த காரணத்திற்காக நோன்பு நோற்றார்களோ அதே காரணத்திற்காக நாமும் நோன்பு நோற்று அதற்குரிய முழு நன்மைகளையும் அடைய அல்லாஹ் அருள் செய்வானாக.

வபாத் செய்திகள்

வபாத் செய்திகள்

1]முஹம்மத் ஹஜரத் மகன் ஜும்மாக் கான் மலேசியாவில் 15.11.12 அன்று வபாத் ஆனார்.

2] மய்யித்து குழி வெட்டும் பீர் முஹம்மத 22.11.12 புதூரில் வபாத் ஆனார்.

3] மிளகாய் யூசுப் மனைவியும் கைப்பாஸ் சர்புதீன் தாயாருமான பரிதாள் பீவி 23.11.12 இன்று சென்னையில் வபாத் ஆனார்.